மாவளி – கார்த்திகை விளக்கு

நம் உள்ளங்களில் ஒளி ஏற்றவும் வீடுகளில் ஒளி ஏற்றவும், அனைத்து சமுதாய மக்களும் கூடி கொண்டாடக் கூடிய ஒரு திருவிழா நம் கார்த்திகை தீபத் திருவிழா.

மழைக்காலம் முடிந்து தூரல் பிசுபிசுக்கும் குளிர்காலத்தில் வருவது கார்த்திகை திருவிழா.

கார்த்திகை திருவிழா மூன்று நாள் கோலாகலமாக நடக்கும்.

ஊரே ஒளியால் அழகு பெறும். பெண்கள் கும்மியடித்து பாட்டுப் பாடுவார்கள் . பெண்கள் உருவாக்கும் வட்டத்தில் நடுவே அமர்ந்தபடி நாங்கள் எல்லாம் உடன் பாடி மகிழ்வோம். இடுப்பில் செம்மறி ஆட்டின் மணிகளை கட்டிக்கொண்டு தொரட்டுக்கோலை ஏந்தியபடி வீதிகளில் ஒலி எழுப்பியபடி ஓடுவோம். தெருவெல்லாம் மாவலி சுற்றிக் கொண்டிருப்பார்கள் அதனை தட்டிவிட்டு வம்பு செய்தபடி ஓடுவது பெரும் உற்சாகம்.

பெரிய கார்த்திகை நாட்டுக் கார்த்திகை கொல்லைக் கார்த்திகை என்று மூன்று நாள் கொண்டாட்டம்.

வீடுகளில், சாமியார் மாலையில் தீபம் ஏற்றுவது பெரிய கார்த்திகை.

நீர்நிலைகளில் கோயில்களில் தீபம் ஏற்றுவது நாட்டுக் கார்த்திகை.

கழனிகளில் குப்பை மேடுகளில் விளக்கேற்றுவது கொள்ளைக் கார்த்திகை.

மூன்றாம் நாள் திருவிழாவின் போது சொக்கப்பானை கொளுத்துவார்கள். நடுவில் நட்டு வைத்திருக்கும் வன்னிமரத்தை தீயின் இடையே ஓடி வெட்டுகிற சடங்கு நடக்கும். சொக்கப் பனை எரிந்து முடிந்த பிறகு அதில் இருக்கிற எரிந்த குச்சிகளைக் கொண்டு போய் வயலில் நடுவதும் அவரை கொடி பூசணிக்கொடி போன்றவற்றில் நடுவதும் வழக்கம். அப்படி நட்டு வைத்தால் விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை. இந்தத் திருவிழாவில் நிலம் செழிப்பதற்கான சடங்குமுறைகள் அதிகம்.
தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலையாரின் கோயிலில் பல நூறு ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திருநாளன்று, மலை உச்சியின் மீது சுடரேற்றப்படுகிறது

திருவண்ணாமலையில், கார்த்திகைத் திருநாள் என்பது மிக முக்கியமான நாளாக இருந்ததை சில கல்வெட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன
 
“அண்ணாமலையார் கோவிலில் கிடைத்த முதலாம் ராஜேந்திரச் சோழனின் 19ஆம் ஆண்டுக் கல்வெட்டு (கி.பி. 1031) கார்த்திகைத் திருநாளில் இறைவன் திருவேட்டைக்கு எழுதருளுவதைப் பற்றிக் கூறுகிறது.

 

‘திருவண்ணாமலை உடையார் திருக்கார்த்திகைத் திருநாளில் திருவேட்டை எழுந்தருளி இருந்தால் பெந்திருவவமிர்தமெய்து செய்தருளவும் அடியார்க்குச் சட்டிச்சோறு பிரசாதஞசெய்தருளவும் குடுத்த பொன் ஏழு கழஞ்சில்’ என்று அந்தக் கல்வெட்டுக் கூறுகிறது.

தொடர்ச்சியாக நம் சிட்னி தமிழ் மன்றத்தில் கார்த்திகை தீப பெருவிழா, தமிழ் மரபுப்படி அனைத்து சமுதாய மக்களாலும் பெரு நிகழ்வாக கொண்டாடப்பட்டு வருகிறது

Date

Nov 03 2023

Time

08:00 - 18:00
QR Code

Leave your comments